அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் அமைந்த என் வீட்டுக் கதவைத் திறந்தவுடனேயே ‘சும்மாயிரு அனிருத்’ என்ற பொருள் படும்படியான சுனிதாவின் குரல் (‘சுப் பஸ் அனி’) காதில் அறைந்தது போல மராத்தியில் மிரட்டியது. அந்த ‘அறை’யை வாங்கிய அனிருத் துளிக்கூட சலனமில்லாமல் தன கையிலிருந்த சூப்பர்மேன் பொம்மையின் கை, கால்களை இஷ்டத்திற்கு வளைத்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தான். இந்த பொம்மைதான் ஒரு வாரமாக சுனிதாவிற்கும் எனக்கும் நடுவிலான பனிப்போருக்குக் காரணம். எனக்கு சூப்பர்மேன்களின் பால் ஈடுபாடு இல்லை. அந்த பொம்மையில் பணம் செலவழிப்பதில் இஷ்டம் இல்லை.
சுனிதாவின் குரலில் மிதந்து வந்த சலிப்பும், வீட்டில் அடர்ந்திருந்த இறுக்கமும் எனக்கு அவளின் அன்றைய மனநிலையை உணர்த்தப் போதுமானதாக இருந்தது. சட்டென ரூமிற்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு சாப்பாட்டு மேசையை நோக்கி விரைந்தேன். என்னைக் கண்டதும் சுனிதாவின் பக்கவாட்டிலிருந்து படுக்கையில் வழுக்கிக் கொண்டு ஓசைப்படாமல் கீழிறங்கி என்னை நோக்கி வந்தாள் அனன்யா.
சாப்பாட்டு மேசையில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்தேன். பின் அனன்யாவுடன் சமையலறையை நோக்கித் திரும்பினேன். இன்றும் எனக்கு இரவுச் சாப்பாடு இல்லை.
எனக்கும் சுனிதாவிற்குமான சண்டைகள் இப்போதெல்லாம் வாரக் கணக்கில் நீடித்து சமையலறையில் மேலும் ஒரு அடர்ந்த பரிமாணத்திற்குள் செலுத்தப் படுகிறது. சுனிதாவின் தாக்குதல் எளிமையானது. சண்டை என்றால் அவள் சாதம் சமைக்க மாட்டாள். இந்த உத்தி என்னை வாலைக் குழைத்துக் கொண்டு அவளிடம் வரவழைக்கும்; சமரசம் செய்து, சாரி சொல்ல வைக்கும் என்பது அவளின் எதிர்பார்ப்பு. கல்யாணம் ஆன புதிதில் நானும் அப்படி வந்தவன்தான். அப்போதுதான் இன்வெஸ்ட்மென்ட் பாங்க்கிங்கில் முதல் படியில் இருந்தேன். அப்போதெல்லாம் ஒரு வேளைகூட சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது. வேலையைத் தவிர, அதில் முன்னேறுவதைத் தவிர வேறெந்த குறிக்கோளும் கிடையாது. ஆனால் இப்போதுஎன்னைப் போன்ற நடுத்தர மேலாளர்கள் நிறுவனத்திற்கு தேவையானவர்கள் இல்லை. எங்களுடைய வேலையை திறமையாகவும், சிறப்புடனும் செய்ய மெஷின்களின் அல்காரிதம்கள் போதுமானவை. எப்போது வேண்டுமானாலும் என் வேலை போகலாம் என்ற பயம் என் வயிற்றில் அமிலத்தை கரைத்துக் கொண்டே இருந்தது. விளைவு: அசிடிடியும், வயிறு உப்புசமும்தான்; அரிசிச் சோறு மட்டுமே சாப்பிட முடிந்தது.
அனன்யாவை கிரானைட் கவுண்டரில் உட்கார வைத்து விட்டு கிரீன் டி பாக்கெட்டை எடுத்தேன். மக்கில் தண்ணீர் நிரப்பி அவனில் வைத்தேன். அனன்யா டைமெரை பிரஸ் செய்தது. “தெரியுமா?” என்றேன் புருவம் உயர்த்தி. “மேகி கூட செய்ய்யத் தெரியும்,” என்றது பெருமையுடன் ஆங்கிலத்தில். வாய் பொத்தி கண்கள் விரிக்க, “மேகி வேணுமா?” என்றது மேலும். வேண்டாம் என்று தலை அசைத்தேன்.
சொல்லப் போனால் சுனிதாவை தொந்தரவு செய்யாமல் நானே சாதம் சமைத்துக் கொள்ள முடியும். தயிர் ஊற்றி அம்மா அண்ணா வீட்டிலிருந்து செயது அனுப்பும் ஊறுகாய் வைத்து என் இரவு உணவை முடித்துக் கொள்ள முடியும். இந்த கோடைக்கு எளிமையான, சுவையான உணவு, தயிற் சோறு. ஆனால் அப்படி செய்தால் எனக்கும் சுனிதாவிற்கும் நடுவிலுள்ள இடைவெளி பெரிதாகும். எங்களுடைய சண்டைகள், வாக்குவாதங்கள் ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும். மேலும் இது என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியும் கூட. இப்போது நான் தனியாக சமைத்துக் கொண்டால், சுனிதா செய்தது தவறு, அதை நான் சரி செய்தது போலாகி விடும். கணவன்- மனைவி இருவருக்குமிடையே விரிசல் வரக் காரணமாகி விடும். அப்பாவையும், அணாவையும் பார்த்துக் கற்ற வரையில் பெரும்பாலும் கருத்து வேறுபாடு வரும் சமயங்களில் மவுனத்தை கடைபிடிப்பது சமயோஜிதம். அது கணவனுக்கு மட்டுமில்லை; குடும்ப ஆரோக்கியத்திற்கும், அமைதிக்கும் வழிவகுக்கும்.ஐம்பது, அறுபது வருடங்கள் சேர்ந்து வாழ உதவி செய்யும். அதற்க்காக தனிமனித ஆசைகள் இருக்கக் கூடாதென்பதில்லை. இது வேறு; அது வேறு. இரண்டிற்கும் நடுவில் உள்ள பாதையில்தான் நானும் சுனிதாவும் தற்போது பயணித்துக் கொண்டு இருந்தோம். அநிருத்தும் என்னை பார்த்துக் கற்றுக் கொள்வான். ஆனால் அவன் நடத்தையை பார்த்தால் ஏற்கனவே புரிந்து கொண்டவன்போலத் தெரிகிறான். இதுபோல பெண்கள் தங்கள் அம்மாவிடமிருந்து சில உத்திகளைக் கற்றுக் கொண்டிருப்பார்கள்.
பால்கனி நாற்காலியில் அமர்ந்து டீயை உறிஞ்சினேன். கசப்பு முழுவதும் உள்ளிறங்கியது. கீழே இறக்கி விட்டவுடனேயே அனன்யா குடுகுடுவென ரூமிற்குள் ஓடியது. கையில் தமிழ் அரிச்சுவடி புத்தகத்துடன் திரும்பி வந்தது.
சாப்பாடு என் உயிருடனும், பாரம்பரிய உணர்வுகளுடனும் ஒன்றிப் போயிருந்தது. தமிழ் பிராமண குடும்பங்களில் மூன்று வேளையும் சாதம் சாப்பிடுவது முக்கியமான பழக்கம். என் தனிப்பட்ட அடையாளத்தை அது எனக்கு நினைவு செய்தது. என்னுடைய இளம் வயது நினைவுகளுடன் நான் சாப்பிட்ட சாப்பாடும் பிணைந்திருந்தது. ஆவணி அவ்விடத்திற்கு அம்மா செய்த பால்பேணி, ஊர் சிவன் கோவில் சனிக்கிழமை பிரசாதமாக தின்ற சம்பா சாதம், கல்யாண விருந்துக்கு போகும் சமயங்களில் இரவுச் சாப்பாட்டிற்காக அம்மா செய்யும் வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும்- நாக்கிலும், மனத்திலும் சுவை சேர்த்துக் கொண்டே இருந்தது. அம்மாவின் சமையல் அபாரமாக இருக்கும். ஒரு சாதம் வைத்தால் கூட உதிரி, உதிரியாய் மல்லிப்பூ போல.
அம்மா இந்த காலத்திற்கு தகுந்தாற்போல வெஜிடேபிள் கொழுக்கட்டையும், பிஸ்சா தோசையும் கூட செய்வாள். ஏன், சுனிதாவிற்கு, என் அண்ணா பெண்ணின் உதவியுடன் அத்தனை பாரம்பரியமான தமிழ் பிராமண சமையல் குறிப்புகளையும் ஆங்கிலத்தில் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொடுத்திருந்தாள்.
சுனிதாவும் சமையலில் கெட்டிக்காரி. அவளுடைய மராத்தி உணவுகள் ரொம்ப சுவையாக இருக்கும்.
ஆனால் எனக்கு சாதம், சாம்பார், கூட்டுப் பொரியலில் இருந்த ஈர்ப்பும் சுகமும் என்னுடைய தமிழ் மீதான காதலுடன், அம்மா, அப்பா, அன்பு போன்ற சொற்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது. இந்த வார்த்தைகள் என் குழந்தைகளின் நாவிலும் புரள வேண்டும்; இந்த வீட்டின் சுவர்களில் இனிமையான தமிழ் வார்த்தைகள் எதிரொலிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்னும் சொல்லப் போனால், சுனிதாவிற்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளுடன் ஒப்பிட்டால் எனக்குத் தெரிந்த மராத்திசொற்பமே. அனிருத்தும், அனன்யாவும் ஆங்கிலம் மற்றும் மராத்தியில் மட்டுமே உரையாடுவார்கள். அவர்களுக்கு தமிழ் அறவே தெரியாது. இந்த தமிழ் அரிச்சுவடி புத்தகத்தை வாங்கிய காரணம் ஏதோ என்னால் முடிந்த தமிழை என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்ற ஆசையிலதான், அதுவும் குழந்தைகளின் மனதில் மொழி குறித்த ஆழமான பதிவுகள் உருவாகும் முன்னரே.
இப்போதே வீட்டில் போதுமான குழப்பம் இருந்தது. அவர்களின் பள்ளிக்கூடங்கள் இந்த குழப்பங்களைப் பெரிது படுத்தும் முயற்சியில் மேலும் ஈடுபட்டன.
இருவருக்கும் தாய்மொழி மராத்தி. இரண்டாம், மூன்றாம் மொழி தேர்வுகள் ஹிந்தி மற்றும் பிரென்ச். இவை மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு செல்கிற இடத்தில் அவர்களுக்கு உதவியாய் இருக்கும். இதற்க்கெல்லாம் மேலே தமிழையும் திணித்தால் அவர்களது சிந்தனை எந்த மொழியில் இருக்கும்? ஒரு மொழியில் சிந்தித்து மற்றோரு மொழியில் பேச்சும், கருத்துப் பதிவும் செய்வார்களா? தமிழ் கற்றுக் கொள்ளவில்லை எனில் தங்களுடைய அப்பாவுடைய மொழி பற்றி, பாரம்பரியம் பற்றி எப்படி தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நடுத்தர வயது திருமணமான, தயிர் சாத பிரியனுக்கு இத்தனை ஆழமான சிந்தனை எங்கிருந்து வந்தது? அதிலும் என்னுடைய முப்பத்தி மூன்றாம் வயதில் சுனிதாவை திருமணம் செயது கொள்ளும் வரை எனக்குள்ளிருந்த தாழ்வு மனப்பான்மை மட்டுமே என்னை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. எனக்கு சுனிதா போன்ற மனைவி கிடைப்பாள் என கனவிலும் நினைத்தது கிடையாது. .
புத்தகத்தில் உள்ள படங்களைக் காண்பித்து அதற்குண்டான வார்த்தைகளை சொல்லிக் கொடுத்தேன். “இலை” என்றவுடன், இதேபோல இன்னொரு வார்த்தையிருக்கிறதே, அது என்ன, என்றாள் அனன்யா. யோசனைக்குப் பிறகு, தெரியவில்லை என்றேன் ஆங்கிலத்தில். “போனில் பாட்டி கூட பேசும்போது உபயோகப் படுத்துவாய்,” என்றாள் தீர்மானமாய். போன் பேசும்போது இவள் எங்கே என்னுடன் இருந்தாள் என்று யோசிக்கும் முன்பாக, ” இல்லை.” என்றாள் எதிர்பாராத தருணத்தில். அதிர்ச்சியாய் இருந்தாலும் அவளுடைய முயற்ச்சியை பாராட்டினேன் மனதார.
சுனிதா பெட்ரூமிலிருந்து புயல் போல வெளிப்பட்டாள். டைனிங் டேபிளின் மேலே இருந்த பாத்திரங்களில் இருந்த உணவு பதார்த்தங்களை இயந்திரகதியில் டப்பர்வேர் டப்பாக்களில் நிரப்பி மூடி பிரிட்ஜில் வைத்து கதவை அறைந்து சாத்தினாள். பின் அனன்யா பக்கம் திரும்பி காரமாக ஏதோ மராத்தியில் கேட்டாள். எனக்கு ‘ஸ்கூல்’ என்ற ஒரு வார்த்தை தவிர அதில் வேறெதுவும் புரியவில்லை. அனன்யா பதில் சொல்லிவிட்டு பின் என் மேல் உராய்ந்த வண்ணம் “இல்லை” என்றது பெருமிதமாக. எனக்கு சுனிதா முகத்தை ஏரிட்டுப் பார்க்கக் கூட தைரியமில்லை.
நான் செய்வதில் நியாயமில்லை. குழந்தைகளை குழப்புவதில் எந்தப் பலனுமில்லை. எனக்கும் சுனிதாவிர்க்கும் இடையிலான மொழி மற்றும் கலாச்சர இடைவெளியையும், அதன் காரணமாக வரும் சச்சரவுகளையும் பயன்படுத்தி நாளை குழந்தைகள் தவறு செய்ய வழி அமைத்துத் தரக் கூடாது. தமிழ் பேசவில்லை என்றாலும் அவர்கள் ஏன் குழந்தைகள் தானே? என் முயற்ச்சியைக் கைவிட முடிவெடுத்த பொது சுனிதாவிடமிருந்து மழையாய் மராத்தி பொழிந்தது. சுருக்கென தைத்த வலியில் அனன்யாவை போகுமாறு ஜாடை செய்தேன்.
ஒன்றன் பின் ஒன்றாக, ஹால், டைனிங், லிவிங் ரூம்களின் விளக்குகள் அணைந்தன. எங்கள் படுக்கையறைக் கதவு அறைந்து சாத்தப்படும் சத்தம் கேட்டது. அந்த அதிர்வுகளின் கடைசித் துணுக்குகள் மறைந்து, சுற்றி இருந்த மற்ற சப்தங்களும் மெள்ள அடங்கிய போது, நான் மட்டும் மெல்லிய வெளிச்சத்தில், காயப் பட்ட மனதுடன், தனிமையின் பிடியில் என் சொந்த வீட்டிலேயே ஒற்றையாய் நின்றிருந்தேன். என்னைச் சுற்றி அடர்ந்த இருள் சூழ்ந்திருந்தது.
Illustration by Madhri Samaranayake
Subscribe for new writing
Sign up to receive new pieces of writing as soon as they are published as well as information on competitions, creative grants and more.