Read time: 1 mins

வாழ்தல் என்பது…

by Rasiah Yuvendra (Thirukovil Kaviyuvan)
9 July 2021

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பின் அண்ணாவைப் பார்த்தபோது  ஒருகணம் மனம் அறுந்து மீண்டது. நிறையமாறியிருந்தான். எப்போதும்சிரித்தபடியே இருக்கும் தன்மையெல்லாம் தொலைந்து…… இறப்பதற்கு முன்எலும்பும்தோலுமாய் சொறியும் சிரங்குமாய் அழுந்திக் கிடந்த அவனுடையபப்பியைப் போல் அவனும்.

ஓளி மின்னும் கண்ணில் ஒரு சிறு பொறி கூடத் தோன்றியதாfத்தெரியவில்லை.  அவனைப் பார்த்த கணமே விம்மி வந்தஅழுகையை என்னால்கட்டுப்படுத்தமுடியவில்லை.                                                                                                                                 “என்னடா இதுசின்னப்பிள்ளை மாதிரி குளறிக் கொண்டு…ஏஎல் படிக்கிறபெடியன் கவிதையெல்லாம் எழுதிற பெடியன் இதுக்குப்போய்குளறிக்கொண்டு……”

அவன் என்னைத் தோளில் இருந்து நிமிர்த்தியபோது மெதுவாய் நிமிர்ந்துபார்த்தேன்.

அவனையும் மீறி கன்னத்தில் கண்ணீரின் ஒழுகல்;. முதுகைத் தடவிக்கொடுத்தான்.

“அண்ணாச்சி வந்திற்றன்தானே இன்னும் என்னத்துக்கு குளறுறாய்  …?”

பேச்சும் மிக நிதானமாய். சொற்களை எடுத்துக் கோர்த்ததுபோல். முன்பெல்லாம்அவன் அப்படியிருக்கவில்லை. எப்போதும்  எதையாவதுபேசிக்கொண்டேயிருப்பான். சம்பந்தh சம்பந்தமில்லாமல் மூத்தஅண்ணாமாருடன் விவாதித்துக்கொண்டிருப்பான். தேவையில்லாமல் பேச்சுநீண்டு கொண்டே போகும்.

“கனக்க அடிச்சவங்களோ”

விம்மி விம்மி கேட்டேன்.

“போடா மடயா ஆர்ரா சொன்னது எனக்கடிச்சதெண்டு. எனக்கொரு அடியும்அடிக்கல்ல.”

அவனையும் அறியாமல் அவன் கைகள் நெஞ்சில் நீண்ட கோடாய்புரையோடிப்போயிருந்த காயத்தை ஒரு தரம் தொட்டுமீண்டது. நான் உற்றுப்பார்த்தேன். நெஞ்சில் மட்டுமில்லை. இன்னும் பல இடங்களில் வடுக்கள். ஒருதரம் மிகுந்த கோபத்தில்அவன் ஆலம் விழுதினால் விளாசியபோது என்அடித்தொடையில் ரெத்தம் தெறிக்க தோல் கிழிந்த காயம் போல.

“ஏன் அண்ணாச்சி பொய் சொல்றீங்க இந்தா காயமெல்லாம் இருக்கு.”

“சீச்சீ அது அடிச்ச காயமில்ல. அங்க இருக்கக்குள்ள வேலை செய்த நேரம்ஒருக்கா இடறி விழுந்திற்றன்”

அவன் எதற்காகவோ பொய் சொல்கின்றான் என்பது புரிந்தது. அதன்பின்அதைப்பற்றி நான் எதுTம் பேசவில்லை. விம்மலுடன்அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். கருநீல நிறமும் பழுப்பு நிறமும் கலந்தது போன்ற ஒருகலரில் ஒரு படலம் அவன்இடக்கண்ணிலிருந்து விழுந்து விடுவது போல்தொங்கிக் கொண்டிருந்தது. அவன் இடக்கண் பார்வையற்றது என்பதைக்கூடசில நாட்களுக்கு முன்தான் நான் தெரிந்து கொண்டேன். முன்பெல்லாம்அவன் என்னைக் கண்டிக்கும்போதோ தண்டிக்கும்போதோ “ குருட்டுக்கண்ணா குருட்டுக்கண்ணா ” என்று மனதிற்குள் திட்டுவதால்தான் என்வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வேன். என்னைப் பக்கத்தில் இருத்தி வைத்துஅவன் கணிதம் சொல்லித் தருகையில் மொக்குத்தனமான என்விடைகளுக்குகுட்டு வைக்கும்போது “ குருட்டுக் கண்ணன், இடியுழுந்து போவான்” எனபெரிதாயக் கத்தி விட்டு ஓடியநாட்களுமுண்டு. இந்த நேரங்களில் அவன் முகம்எப்படி வாடிப்போயிருக்கும் என்று இப்போதும் என்னால் உருக்கொண்டுவரமுடியவில்லை. உண்மையில் அவன் இடக்கண் பார்வையற்றது என்றுதெரிந்திருந்தால் அப்போது அவன் மனதைக்காயப்படுத்தியிருக்க மாட்டேன்என்றே நம்புகின்றேன்.

என்னதான் அவன் எனக்கு எதிரிபோல் தோற்றமளித்து அவனை நான் “வாடாபோடா ”  என்று அழைத்தாலும் எல்லோரையும்விட அவனில்தான் கூடிய பாசம்எனக்கு. அவனை “ அண்ணாச்சி ” என்று மரியாதை கொடுத்துக் கூப்பிடவேண்டும் என்று அப்பா அடிக்கடி என்னிடம் சொல்வார். முக்கியமாய் அவன்கண்ணைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று கொஞ்சம்கண்டிப்பாய்சொல்வார். ஆனால் அண்ணா அதுபற்றி என்னிடம் எதுவுமே சொன்னதில்லை. “ நான் உனக்கு அண்ணன்” என்றுகூட ஒருதரமும் சொன்னதில்லை. ( ஒருவேளை அப்போது அவனை ஒரு தரமாவது “ அண்ணாச்சி ” என்றுகூப்பிட்டிருந்தால்வலுவாய்  சந்தோசப்பட்டிருப்பானோ தெரியாது.)

என்னைத் தண்டிக்கும் ஒவ்வொரு சமயங்களிலும் மூக்கால் வழிந்தபடியிருக்கும்என்னை கூட்டிச் சென்று குளிக்க வைத்து ( குளிக்கும்போது புத்தி சொல்தல்நடக்கும்) துடைத்து,தலைசீவி, பவுடர் போட்டு சைக்கிளில் உட்கார வைத்து ( அப்போதுஅவனிடம் அழகான ஓர்  “ஏசியா” சைக்கிள் இருந்தது.நீலக்கலர். அதற்கு என்ன நேர்ந்தது என்பதும் இப்போது சரியாக ஞாபகமில்லை) கோயிலுக்கு அல்லது விளையாட்டுப் பார்க்க கூட்டிப் போவான். மழைக்காலமென்றால் தண்ணீர் கரைபுரண்டு ஓடி கடலுடன் கலக்கும்காட்சியைப் பார்க்க முகத்துவாரத்திற்குக் கூட்டிப் போவான்.

எனக்கு நேரே மூத்தவனுக்கு இது பற்றி மிகுந்த பொறாமை அல்லது வருத்தம். தன்னை ஒரு போதும் சைக்கிளில் ஏற்றுவதில்லை என்றும் தன்னை எல்லோரும்கழித்து நடப்பதாயும் அப்பாவிடம் அடிக்கடி முறைப்பாடு.

இந்தச் சிணுங்கல்களெல்லாம் அண்ணாவின் காதில் ஏறுவதில்லை. ஏனோதெரியவில்லை அவனக்கு என்னைத் தவிரயாரையும் சைக்கிளில் உட்காரவைப்பதில் அதிகம் விருப்பமில்லை. ஆனாலொன்று அண்ணாவின் சைக்கிளில்நான் ஏறுவதாயிருந்தால் மிகவும் சுத்தமாய் இருக்க வேண்டும். vந்தக் கெட்டவாடையும் என்னிலிருந்து வீசக்கூடாது. vங்கள் குடும்பத்திலேயேஅண்ணாதான் மிகவும் சுத்தமான பேர்வழி. ஊனப்பட்ட தன் கண்ணைமறைப்பதற்காக அநேகமாய் ஒருகண்ணாடியை மாட்டிக்கொள்வான். அவனின்கூர் மூக்கிற்கு அது இன்னும் எடுப்பாய் இருக்கும். அண்ணாவைச்  சுற்றிஎப்போதுமே ‘சென்ற்’ வாசைன.

“மன்மதக்குஞ்சு,மன்மதக்குஞ்சு” என்று மூத்தண்ணாமார் இருவரும் அவனைக்கேலி பண்ணுவார்கள்.

“அவன்ட வயதில நீங்க இதைவிட மோசம்”  என்று அப்பா அவர்களின்முகங்களைக் கறுக்க வைப்பார்.

எப்போதும் எடுப்பாய் இருக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவின் எண்ணம். அவனுடன் சைக்கிளில் போகும்போதே பலதடவைகள் ஒன்றைக்கவனித்திருக்கின்றேன். வழியில் யாரேனும் பருவப்பெண்கள் போனால்அண்ணாவின் சைக்கிள் வெட்டிவெட்டிப் போகும். மணி தேவையில்லாமல்ஒலிக்கும். ஜேசுதாஸ் அல்லது எஸ்.பி.gp அழகாகச் செத்துக் கொண்டிருப்பர். சுஜிமச்சாள் போனால் கேட்கத்தேவையில்லை. சீட்டி வேறு. மச்சாளைஇலக்காகக் கொண்டு சைக்கிளை உழக்கிய சமயங்களில் அவனுடன் நானும்இருந்திருக்கின்றேன். நெஞ்சில் புத்தகத்தை அணைத்தபடி முகத்தைச் சரித்துஅண்ணாவைக் கடைக்கண்ணால் பார்ப்பாள். இதழ்கள் மெல்லப் பிரியும். பிறகுதோழிகளுடன் உரத்துக் கதைத்துச் சிரித்தபடி. சைக்கிள்காற்றில் பறக்கும். நான் ‘ஹேன்டிலை’ கெட்டியாக பிடிக்க வேண்டி வரும்.

அவன் முகம் இறுகிப்போன நாள் வரைக்கும் இப்படித்தான் வாழக்கை கழிந்துபோயிற்று……..

*                         *                       *

அதன் பின் அப்பா நீங்கலாக அண்ணாவின் போக்கு  யாருக்கும்பிடிக்கவில்லை. அண்ணாவை வீட்டினில் காண்பதுவும் அரிதாய்ப் போயிற்று. யாழ்ப்பாணம் சென்று படித்து வந்த ‘ நோட்ஸெல்லாம்’ புழுதி படியத்தொடங்கிற்று.

அவன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அம்மாவின் புறுபுறுப்புf;கள்அதிகமாயின. அண்ணாவின் நிமிர்த்தம் அம்மாவிற்கும்அப்பாவிற்கும் இடையில்சண்டை மூளும். மூத்தண்ணாமார் இருவரும் அம்மாவிற்கு பலத்த பின்னணி. தான் மிகக் கஸ்ரப்பட்டுசேமித்தனுப்பிய பணத்தில் படித்த நோட்சுகளைகறையான் தின்பதில் ரெண்டாவதண்ணாவுக்கு மிகுந்த வருத்தம்.

“அவன அங்க படிக்க அனுப்பியிருக்கக் கூடா. அங்க போய்த்தான்அவனிப்பிடிக் கெட்டுப்போய்த்தான்.” என்று அடிக்கடி குற்றச்சாட்டு.

 

எனக்கொன்றும் புரிந்திருக்கவில்லை. அண்ணா கெட்டுப்போனான் என்றுசொல்லப்பட்டது வியப்பாய் இருந்தது. எப்படிக்கெட்டுப்போனான் என்றுயோசித்துப் பார்த்தேன். யோசித்துப் பார்க்கையில் அண்ணாவில்மாற்றங்கள்தான் தெரிந்தன. அவன் என்னைக் கவனிப்பதைக் கூட அடியோடுமறந்திருந்தான். நான் எத்தனை நாள் பள்ளிக்கூடம்போகாவிட்டாலும்அதைப்பற்றியெல்லாம் ஒரு கேள்வியில்லை. என்னைஎதற்கும் கண்டிப்பதில்லை,தண்டிப்பதில்லை.

எப்போதாவது ஒரு எண்ணம் வந்தால் வீட்டில் சாப்பிடுவான். குசினிக்குள்அழைத்துச் சென்று அம்மா புறுபுறுத்தபடி சோறுபோடுவாள். வெளியேசாய்மனக் கதிரையில் படுத்துக்கிடக்கும் அப்பா ஒரு கனைப்புக் கனைக்கஅம்மாவின் சத்தம் அடங்கிப்போகும். அண்ணா சாப்பிடுகையில்ää வீட்டினில்எல்லோருமே குசினிக் கதவருகில் நின்று கொண்டு அவனையேபார்த்துக்கொண்டிருப்பார்கள். சின்னக்காவின் சட்டையைப் பிடித்தபடி நானும்போய் நிற்பேன். சின்னக்காவின் கண்கள் கலங்கியதுபோல் இருக்கும்.

“என்னடா இது பால் குடிக்கிற பிள்ளை மாதிரி அக்காச்சிர சட்டையப் பிடிச்சுக்கொண்டு” இஞ்ச வா வா”

அண்ணா என்னையழைத்துச் சோற்றைப் பிசைந்து ஊட்டி விடுவான். அதுபுதுப்பழக்கம். முன்பு எல்லாம் செய்ததுண்டு. ஆனால் சோறு ஊட்டிவிட்டதில்லை. எனக்குப் புத்தி தெரியாத வயதில் செய்திருப்பானோ தெரியாது. அண்ணாக்கு கிட்டேசெல்லும்போது ஒரு வாடை வீசும். மூக்கைத் தொடுவேன். அண்ணாவின் முகம் இருண்டு போகும்.

அண்ணா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வெளியே ஒழுங்கையில்வினோதமான சில சத்தங்கள் கேட்கும். பரபரப்பாவான். சாப்பாடு அப்படியேஇருக்க கையை அவசரமாக அலம்பிக்கொண்டு எழுவான்.

“கோதாரி பிடிச்சதுகள் வந்திற்றுதுகள்”  அம்மா வாய்க்குள் முணுமுணுப்பாள். திரும்பி அம்மாவை நோக்கி தீர்க்கமான ஒருபார்வை.

வெளியே வந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவின் முன்தயங்கியபடி நிற்பான். அப்பாää பேப்பரைத் தாழ்த்தி கால்மாட்டில் நிற்கும்அண்ணாவைப் பார்ப்பார். போ என்பது போல கண்கள் சுழலும். அண்ணாஇருளில் பாய்வான். அப்பாவின்கண்கள் பேப்பரில் போகும். உள்ளே ஒரு குட்டிமந்திராலோசனை ரகசியமாய் நடக்கும்.

 

“அப்பாட சப்போட்டாலதான் அவனிப்படி”

“மற்றாக்களுக்கு இல்லாத அக்கறை இவருக்கென்னத்திற்கு”

“எங்கட வேலையும் போயிருமோ எண்டு பயமாயிருக்கு”

நான் குசினிக்குள் நுழையும்போது இப்படி ஏதாவது ஒரு வசனம் என் காதில்விழும். அம்மா தீராத கோபத்தோடு அண்ணாவின்சாப்பாட்டுக் கோப்பையில்மிச்சம்  இருப்பதை கொட்டிவிட்டு கோப்பையை தண்ணிச் சட்டிக்குள்எறிவாள். மூத்தண்ணாவின்பிள்ளைகள் கொட்டாவி விட்டபடி இருப்பர். அண்ணி யாருக்கும் தெரியாமல் மூத்தண்ணாவைச் சுரண்டிக் கொண்டிருப்பாள்.

“சரியம்மா அவன்ட கதய விடுவம். அந்தக் கழுத எப்பிடிப் போனால்தான் என்ன”

அம்மாவின் பதிலுக்குக் காத்திராமல் மூத்தண்ணா எழும்பää அண்ணி மடியில்படுத்துறங்கும் செல்வியைத் தட்டி எழுப்பிக்கொண்டு அவரின் பின்னாள்அவர்களின் அறைக்குப் போவாள். அடுத்தண்ணாவை சின்னண்ணி அழைக்கும்சப்தம் அவர்களின்அறையில் இருந்து கேட்கும். அவர் மெதுவாக நழுவிப்போவார். எல்லோரும் கழன்று போக நானும் அம்மாவும் குசினிக்குள்தனித்தபடி.

“டேய் சின்னவா அப்பாவச் சாப்பிடக் கூப்பிடு”

அப்பா பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்து வருவார். அம்மா அப்பாவிற்குச்சாப்பாட்டைப் போட்டபடி எதையேனும்கதைக்கத் தொடங்குவாள். கதையெடுக்க முன் என்னையொரு தரம் பார்ப்பாள்.

 

“டேய் சின்னவா நித்திர வரல்லயோ”

“வருகுது”

“அப்ப இங்க நிண்டுகொண்டு என்ன செய்யிறாய் போய் நித்திரயக் கொள்ளன்”

“தனியப்படுக்கப் பயமாயிருக்கம்மா”

“ஏன் சின்னண்ணாச்சோட போய;ப்;படன்”

“அவன் உழத்துவான்”

“அப்ப உன்ர கொண்ணன் போகக்குள்ள இழுத்துப் பிடிச்சிருக்கலாமே”

அம்மா எரிந்து விழுவாள். அப்பா முறைத்துப் பார்க்க அந்த இடம் மௌனமாகும்.

“இங்கேப்பா இங்கேப்பா” எச்சரிக்கையாய் அப்பாவை விspப்பாள்.

“என்ன”

“இவள் அண்ணன்ட பெடிச்சி நல்ல குணமாம் எண்டு சொல்லுறாங்கள். ஆள்நல்ல வடிவும்தான்”

“அதுக்கிப்ப என்ன”

“இல்ல இவன் கணேசனுக்கு ஒருக்காக் கேட்டுப் பார்த்தமெண்டால்”

“ஏன் அவனுன்னட்ட கலியாணம் செய்து வைக்கச் சொல்லி கேட்டவனோ”

“அதுக்கில்லப்பா அவனுக்கொரு கால்கட்டப் போட்டமெண்டால் பிறகு மத்த  வழிகளில் போக மாட்டான். அந்தப்பொடிச்சிக்கும் அவனில ஒரு விருப்பம்போலதான் கிடக்கு”

“அவன் எந்த வழியில போகோணுமெண்டு அவனுக்குத் தெரியும். நீ பேசாமல்உன்ர அலுவலப்பாரு”

அப்பா கோபமாய் கையை உதறிக் கொண்டு எழுவார். மூச்சு வாங்கும். இருமத்தொடங்குவார். துப்பல்ச்  சிரட்டையை எடுத்துக் கொண்டு பிடிப்பேன்.

“டேய் சின்னவா நீ ஆம்பிளப் பெடியனெல்லோ போய்த் தனியப் படு பாப்பம். பயமாம் பயம்”

அப்பா என்னைக் கண்டித்ததன் அர்த்தத்தைப் புரிய எனக்கு வெகு காலம்தேவைப்பட்டிருந்தது.

*              *           *

“இப்பிடித்தான் அண்ணனும் தம்பியும் ஆளையாள் பாத்துக்கொண்டுகுளறிக்கொண்டிருங்கோ. அங்க பாக்க வந்தாக்கள்எல்லாம் வெளியிலகாத்துக்கொண்டு நிக்கட்டும்”

அக்காவின் குரலில் என் நினைவுகள் கலைந்தன. அண்ணாவைப் பார்த்தேன்.

அவன் பாழ் விழுந்து போய்க் கிடக்கும் எங்கள் பழைய வளவையும் அதற்குள்இடிந்த குறையில் கிடக்கும் பெரிய வீட்டையும்வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். வளவு முழுவதையும் அடம்பன் கொடி ஆக்கிரமித்திருந்தது. அடம்பன் விட்டுக்கொடுத்த இடத்திலுள்ள புற்களை மேய்ந்தபடி நாலைந்து  மாடுகள். நெற்றியில் வெள்ளைப் பொட்டுடன் நின்ற சிவலைஎங்களுடையது. இல்லை எங்களுடையதாய் இருந்தது. அப்பாவின் வருத்தம் சாப்பிட்டகடைசிச் சொத்து.

 

“ஆருக்கு சின்னவா வளவ வித்த நீங்க”

“விதானையாரப்பச்சிக்கு”

“அப்பாட சவத்தயும் இந்தக் குடிசையிலதானோ வச்சிருந்த”

“இல்லண்ணாச்சி. அப்பா செத்த பிறகுதான் இங்க வந்தம். அதுக்குப்பிறகுதான் அண்ணாச்சிமாரும் தனியாப் போயித்தாங்க. படிக்கிறதுக்காவண்டிநானும் மூத்தண்ணாச்சிட்டப் போயித்தன்”

“சின்னக்காவுக்கு எப்ப கலியாணம் நடந்தது”

“அதுகும் அப்பா செத்த பிறகுதான்”

“இப்பிடிக் குடிக்கிற ஆள்தானோ கிடைச்ச”

“ஓ! இஞ்ச உழச்சிக் கொட்டிக் கிடக்கிற சீதனத்துக்கு பெரியஉத்தியோககாரன்தான் வரப்போறான்.”

உள்ள சலிப்பையெல்லாம் அக்கா கொட்டித் தீர்த்தாள்.

“டேய் உன்னப் பாக்க ஆக்கள் வந்திருக்கென்ன, நீ இஞ்ச கதைச்சுக்கொண்டிருக்கென்ன”

அம்மா பேச்சின் திசையை மாற்றினாள்.

அண்ணாவும் நானும் அலுப்புடன் எழுந்தோம். வெளியில் ஒரு கூட்டம். இறந்துமீண்டவனைப் பார்க்கும் வியப்பு கண்களில். கிட்டச் செல்ல அண்ணாகூச்சப்பட்டான். தோளில் குழந்தையுடன் சுகி மச்சாளும் நின்றாள். மச்சாளைப்பார்த்து அண்ணா தடுமாறுவது புரிந்தது.

“மச்சான் உன்னப் பாப்பமெண்டு கனவிலயும் நாங்க நினைக்கல்லடா”  அண்ணாவின் பால்ய சினேகிதன் ஒருத்தன் மனம்கசிந்து சொன்னான். (அவன்தோspலும் அழகானதோர் குழந்தை) எல்லோர் கண்களும் மெதுவாய்க்கசிந்தபடி.

 

“எப்பிடி எல்லாரும் சுகமாய் இருக்……..:” சொல்லி முடிக்குமுன் அண்ணாஇருமத் தொடங்கினான். கை நெஞ்சை இறுகப்பொத்த அப்படியே சுருண்டுவிழுந்தான். ஒவ்வொரு இருமலுக்கும் நெஞ்சு எகிறி எகிறி மீண்டது. வாயில்நுரையும் இரத்தமும். ஒன்றும் தெரியாது கொஞ்ச நேரம் மலைத்துப் போனேன். உணர்வு திரும்ப அண்ணாவை மடியினில்  போட்டேன். இருமும்போது அவனைஅமுக்கிப் பிடிக்க இயலாது போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாய் இருமல்அடங்க அண்ணா மெதுவாய்கண்களைத் திறந்தான்.

“பாடையில போறவங்கள் என்னமாப் போட்டு அடிச்சி வச்சிருக்காங்கள்” முகம்தெரியாத யாரையோ திட்டிக் கொண்டு அக்கா ஓடி வந்தாள். பின்னால் அம்மா. வந்திருந்தவர்களிடையே மெல்லிய சலசலப்பு. ஆளாளுக்கு வாய்த்தபடிஅண்ணாவைப் பற்றிவதந்திகள் கிளம்பிற்று.

“காக்கை வலிப்பாம்”

“இல்லயாம் பெடியன் நல்லா அடிபட்டுத்தானாம். அது ஒரு புது வருத்தமாம். ஆள் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானாம்”

‘‘அதெல்லாமில்ல, அது மற்றதிரவேல. கடிச்ச உடனே செத்திருக்கவேண்டியது. இப்பத்தான் வேலையைக் காட்டுது போல’’

ஊரில் பொழுது போகாத நேரங்களில் எடுத்துப் போட அண்ணா ஒருதனிக்கதையானான்.

*          *        *

உச்சி வெயில். பரந்து விரிந்த மாமரத்துக் கீழே மேசையைப் போட்டுக்கொண்டு படித்துக் கொண்டிருந்தேன். பரீட்சைக்குஇன்னும் ஐந்தே மாதங்கள். (அண்ணா மீண்டு வந்து ஆறுமாதங்கள்) மேசையின் பெரும்பகுதியைநிரப்பியிருந்தன அண்ணாவின் யாழ்ப்பாணத்து நோட்சுகள். யாரோ பின்னால்நிற்கும் அசைவு.

‘’வாங்கண்ணாச்சி, என்ன படிக்க வருவன் எண்டு சொன்னீங்கள் ரெண்டுமூண்டு நாளா இங்காலப் பக்கமே காணயில்ல

இந்த எறியக் கணக்க எப்பிடிச் செய்யிறதெண்டே தெரியாமல் கிடக்கு. ஒருஐடியாவும் வரமாட்டானெண்டுது.’’

வாங்கிப் பார்த்தான். சில நிமிடங்களில் விடை. எனக்கு வெட்கமாயிருந்தது.

‘’அப்ப உங்களுக்கு ‘ரச்’ விட்டுப்போகல்லதானே. நீங்களும் வடிவா இந்தமுறை எக்ஸாம் எடுக்கலாம்.’’

‘’பாப்பம், இருந்தால் எடுப்பம்.’’ வேண்டா வெறுப்பாய் பதில் வந்தது.

‘’ சரி சரி படிக்கிற உன்ன குழப்பல்ல. நான் போறன். பின்னேரம் ஒரிடமும்போகாமல் நில்லு. நாம ஒரிடத்தபோகோணும்.’’ படலையைச் சத்தமாய்சாத்திவிட்டு விரைந்து சென்றான்.

சொன்னபடியே கருக்கலுக்குச் சற்றுமுன் வந்தான்.

யாரோவின் ‘லுமாலா’ சைக்கிள். அதே நீலக்கலர். ஓடிச்சென்று ‘வாரில்’ ஏறிக்கொண்டேன். எதுவும் கேட்கவில்லை. அவனும்சொல்லவில்லை. சைக்கிளை உழக்க மூச்சு வாங்கினான். நான் மாறி உழக்கியிருக்கலாம்.

எனக்கு சந்தோசமாயிருந்தது. நீண்டகாலத்தின் பின் அண்ணாவின்சைக்கிளில் உட்கார்ந்து சென்றது என் சின்ன வயதை ஞாபகப்படுத்தியது. அப்பாவை ஞாபகப்படுத்தியது. ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றஎங்கள் முழுக் குடும்பமுமேநிலவில் வாசலில் கூடியிருப்பதும்அம்மம்மா கதைசொல்வதும் ஞாபகம் வந்தது. அந்த ஞாபகங்கள் என்னைச்சந்தோசப்படுத்தின.

என்னை உட்கார வைத்து உழக்குவது அண்ணாவுக்கு அதிகம்கஸ்டமாயிருக்காது என்று எண்ண முயன்றேன்.

சைக்கிள் அநேகமாக ஊரின் எல்லா வீதிகளினும் சென்றிருக்கும். கடைசியில்கடற்கரைப் பக்கம் வந்தபோது கனமானஎதிர்காற்று. என் தலைமுடிகலைந்தது. அண்ணா பெரிதாய் மூச்சு வாங்கினான். என்றுமேயில்லாதபடிஅவன் வாயிலிருந்துசாராய நெடி. தலையை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்தேன். வலக்கண் சிவந்து கிடந்தது. இடக்கண் எப்போதும் போலவேபழுப்பும்கருநீலமும் கலந்த நிறத்தில் விழுந்து விடப் போவது போல் ஒரு படலத்தைக்கொண்டதாய்.

மீன்வாடிக்கு அருகிலுள்ள மதகில் சைக்கிளைச் சாத்திவிட்டு இருவரும் அதில்குந்திக்கொண்டோம். கடற்கரை மணலில்சிரட்டைகளை அடுக்கி விளையாடிக்கொண்டு கூச்சலிட்டபடி நாலைந்து வாலுகள். புதிதாய்க் கல்யாணமான ஜோடியொன்று கடல் நுரை கால்கழுவ கைகோர்த்து நடந்தபடி.

அண்ணா எதுவும் பேசவில்லை.

நாலைந்து கற்களைப் பொறுக்கியெடுத்துக் கொண்டான். மதகோடுசேர்ந்தாற்போல் இருக்கும் குட்டைக்குள் தண்ணீர்தெறிக்க எறிந்துகொண்டிருந்தான். பின்னால் போடியாரின் தென்னந்தோப்பில் ஓர் ஓலைவிழுந்த சத்தம். திரும்பி பார்த்தான். ஒரு வகைச் சிரிப்பு. கொஞ்ச தூரத்தில்தோணிகள் பெரிய வலைக்காய் கடலுக்குள் சென்றபடி. மோட்டார்ச் சத்தம்தனியாய்க்கேட்டது.

“அங்க பாருங்கண்ணாச்சி அந்தா அந்தாää சவக்காலைப் பக்கம் அண்ணாச்சிரதோணி போகுது?” நான் சொன்னது அவன்காதில் விழுந்ததாய் தெரியவில்லை.

“சின்னவா ஒழுங்காய் படிக்கிறாதானே?”

ஓமz;zhச்சி

“கவனமாய்படி கட்டாயம் பாஸ் பண்ணி “கெம்பஸ்” போகவேணும். நான்படிச்சது வீணாகிப் போச்சுதெண்டு எல்லாரும் நினைக்கிறாங்க நீயாவதுஒழுங்காப்படி”

“ஏன் வீணாகப் போக? நீங்களும் இந்தமுறை எக்ஸாம் எடுக்கிறது தானே?”

“இல்லடா சின்னவா, நான் இன்னங் கன நாளைக்கு இருக்க மாட்டன்”

“இதென்ன பயித்தியக்கத. வருத்தம் எல்லாருக்கும்தானே வாற அது சுகமாப்போயிரும்”

“இல்லடா வாழவேணுமெண்டு எனக்குக் கொஞ்சமும் எண்ணமில்ல. இந்தக்கண் மட்டும் ஒழுங்காத் தெரிஞ்சிருந்தால்அண்டைக்கே செத்திருக்கலாம். அவங்கள் வந்தது தெரியாமல் போயித்து. அப்ப செத்திருந்தா இப்ப இப்பிடிக்கவலைப்படத்தேவையில்ல. உனக்கொண்டும் தெரியாது சின்னவா. சொன்னாலும் விளங்குமோ எண்டும் தெரியல்ல.எல்லாருக்கும் என்னிலநல்லாமனம் விட்டுப் போச்சி. படிக்கக் கொட்டினது காணாதெண்டு இப்பவருத்தத்துக்கும் கொட்ட வேண்டிக்கிடக்குதெண்டு அண்ணாச்சி யோசிக்குது. மூத்தண்ணாச்சி வீட்ட போனா ஒரு தொழுநோய்க்காரன பாக்கிற மாதிரிஎல்லாரும்அருவருத்துப் பாக்கிறாங்க. பிள்ளைகள் கிட்ட வந்தா மச்சாள்உறுக்கிக் கூப்பிடுறா. கடசி அக்காச்சிக்குக்கூட என்னில சலிப்பு வந்திற்றுது. பாவம் அம்மா அவதான் என்ன செய்வா? அவவே அக்காவோட ஒட்டின மாதிரிஅத்தான்ட குத்தல்கதைகளையும் கேட்டுக் கொண்டு……

“அதுக்கு செத்தா எல்லாம் சரியாப் போயிருமோ? எக்ஸாம் எடுத்துப்போட்டுஒரு வேலையில கொளுவிற்றால் எல்லாம் சரியாவரும்”

“அது மட்டும் வருத்தம் விட்டு வைக்குதோ தெரியா. நேற்றும் சந்தையடியிலறோட்டில விழுந்து கிடந்தனாம். மாமா தூக்கிக்கொண்டுபோய் அவங்கட வீட்டபோட்டிருக்காரு. சுகி பாத்துப்போட்டு ஓவெண்டு கத்தினாளாம்.அவ்வளவுரத்தமாம். ……..

சரி இதுகள யோசிக்காமல் நீ கவனமாப்படி, எடு போவம்”

திரும்பி வரும்போது கடற்கரை யாருமில்லாமல் வெறிச்சோடியபடி. தோணிகளெல்லாம் தூரத்தே புள்ளிகளாய்த் தெரிந்தன. சிறுவர்கள்விளையாடிய சிரட்டைகள் நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன. பட்டமரமொன்றிலிருந்து அண்டங்காக்கையொன்று இடைவிடாது கத்திக்கொண்டிருந்தது. பொழுது கருக்கலை நோக்கி….

முதலும் கடைசியுமாய் அண்ணாவை ஏற்றி சைக்கிளை உழக்கிக் கொண்டுவந்தேன். அண்ணா கனமாய;த் தெரிந்தான். அதைவிடa; இதயம் கனத்துக்கொண்டிருந்தது. மறு நாளின் துக்கத்தையும் சேர்த்து……

* * *

பின் வந்த காலங்களில் எப்போதாவது அண்ணா நினைவில் வருவான். யாரேனும் ஒருத்தர் இறக்கும் போது, தூக்கம் வராத நள்ளிரவுகளின் போது, மனதை நெருடும் கவிதையொன்றை படிக்கும்போது….. இப்படி எப்போதாவதுஅண்ணா   நினைவில்வருவான். நேற்றிரவு என் சுட்டி மகளை தோளில் போட்டுஉலாத்தும் போதும் ஒரு கவிதையாய் வந்தான்.

 

“மன்னித்துக்கொள் அண்ணா!

உன்போல்

வாழ்வின்கனத்தை

காற்றில்எரிக்க

இன்னும்

நான் கைவிரிக்கவில்லை.

 

என் வீட்டின் ஓலைகள்

சடசடத்துக் கிளம்பும்வரை

புயலைப் பார்க்கவும் விரும்பவில்லை.

எனக்குத் தெரியுமண்ணா!

முகம் இறுகிப்போனநாளிலிருந்து

உன்அசைவுகளெல்லாம்

அர்த்தம் நிறைந்தவை.

ரெத்த வரிகளிடையே

பிரிந்துகிடந்த

உன் உதடுகள் கூட

ஒரு கல்வெட்டுப்போன்றது

இருந்துமென்ன

ஒரு கல்லறைகூட

உனக்குக் கட்டப்படாமலேயே

போயிற்று!

வெட்கமாய்த்தான் இருக்கின்றது!

மழைக்கால நாட்களில்பறவைகள்

தாழத் தாழத் தாழப் பறப்பதுபோல்

வாழ்வைக் குறுக்கிக்கொண்டேபோவது

வெட்கமாய;த்தான் இருக்கின்றது

என்ன செய்ய

எனக்கொரு

மனைவியும்குழந்தையும்

வீடும்………”

கவிதையை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றதுஎன்று மனம் சொல்லிக் கொண்டது.

 

——– திருக்கோவில் கவியுவன்


Return to the collection


Illustration by Madhri Samaranayake

About the Author

Rasiah Yuvendra (Thirukovil Kaviyuvan)

Rasiah Yuvendra’s pen name is Thirukovil Kaviyuvan. He was born at Thirukkovil in Ampara District, Sri Lanka, and has a Bachelor of Science in Engineering from the University of Moratuwa. Thirukovil Kaviyuvan is now employed in the Zonal Education office in Thirukkovil. He published Vaaldhal Enpathu (What living means …), a collection of short stories, in 1996.  […]

Related