Read time: 1 mins

இரண்டு தலைநகரங்கள் & உத்தரை

by Ahilan Packiyanathan
9 July 2021

இரண்டு தலைநகரங்கள்

வேடிக்கை வாணச் சிறுமழையும்

அணிநடை யானைப் பேருலாவும்

படர் நெடும் மின்கொடிச் சரமும்

உங்களிராவை நனைக்கையில்

பொங்கிப் பிரகாசம் கொள்ளும் உங்கள் நகரத்தை

போகமும் போதையும் மிஞ்சித் தள்ளாடும் நள்ளிராக்களை

தூக்கத்தினால் மூடி நீங்கள் புரள்கையில்

சன்னங்களாலும் பீரங்கிகளாலும்

உடைத்துத் திறக்கப்படுகிறது

ஊரடங்கிய வேறொரு நகரம்

பசியும் வலியும் தீராப் பீதியும் பீடித்த நள்ளிராக்களில்

பெருக்கெடுக்கும் இரத்தத் தெருக்களை

தூங்காக் கண்களால் கடக்கிறார்கள்

இன்னொரு தலை நகரத்து மக்கள்


 

உத்தரை

தோட்டத்தில் செந்தாழ் மலர்க் குடுவையில்

நிலா சொரிந்திருக்க்க கண்டாள்

தொலைவில் காவலரண்களின் தீ நாக்குகள் புள்ளிகளாய் தெரிந்தன

பேரமைதி அச்சமூட்டியது

சிதிலமடைந்த மாளிகையின் நெடுந்தோங்கிய நிழல்களை ஆழப் பார்த்தாள்

எப்போதும் பிடிவதமாய் முன் சரியும் குழற் கற்றைகளைப்

பின் தள்ளியபடி எப்போதும்போல அவன் தோன்றுகிறானாவென

 

பெருமூச்சு விட்டாள்

கூட்டம் கலைந்து விட்டது

 

கூடத்து நிலைக் கண்ணாடியில் அவளைப் பார்த்தாளவள்

விராடனின் கனவே

அபிமன்யுவின் பேரழகியே

நீயல்ல இது

யாரோ

வேறு யாரோ

 

அஸ்தினாபுரத்து இளம் விதவைகள் கூட்டத்தில் ஒருத்தி

அரற்றியபடியே

வெளியே பார்த்தாள்

வெறிச்சோடிய தெருக்களில் யாருமில்லை


Return to the collection


Illustration by Nur Khalisah Ahmad

About the Author

Ahilan Packiyanathan

Ahilan Packiyanathan, born in Jaffna, Sri Lanka, is a senior lecturer in Art History at the University of Jaffna. He has published three poetry collections: Pathunkukuzhi Naatkal (2001),  Saramakavigal   (2011) and Ammai (2017). An English translation of his poems, Then There Were No Witnesses, was published by Mawenzi House in 2018.  He writes critical essays on poetry, heritage, theatre and visual […]

Related