உயிரற்று கிடந்த கடல்
அலைகள் ஆரப்பரித்தடங்கிய கடலோரம்
சடலங்களை கண்டோம்
கண்கள் அகல விரிந்தும்
கைகள் சூம்பியும்
காயங்கள் துப்பாக்கிபோல் நீண்டும் இருந்தன
நுரைப்பூக்கள் நசுங்காமல்
அலையில் கயிறெறிந்து
மீனுக்காய் காத்திருந்தவர்கள்
கரிய கொடும் இரவில்
என்ன இரந்திருப்பார்கள்
ஒரு துண்டு நிலத்தை
அதிகாரத்தில் பங்கை
ஒரு நாளும் கேட்காதவர்கள்
அழுது வடித்த மழை
ஒடுங்கி நிற்கும் தென்னைகள்
சாட்சியாய்
உயிருக்காய் மண்டியிட்டு அழுதிருப்பார்கள்
ஓசைப்படாமல் சுட்டுச் சென்றிருக்கிறார்கள்
வெண்மணல் சிவந்து கறுத்திருந்தது
காற்று தலையடித்துப் பதறிட
சடலங்களை மீட்டு வந்தோம்
அலைக்கும் கரைக்கும் இடையில்
உயிரற்று கிடந்தது கடல்
நிழல் தேடும் சூரியன்
முன்னொரு காலத்தில்
எனதூரில்
கட்டிடங்கள் காப்பமாவதில்லை
பட்டியாய்ப் பல்கிப் பெருகவில்லை
ஈன்று தள்ளியதெல்லாம்
மருதை,
வாகை, வம்மி
மூன்று தசாப்த்தம் முடிவதற்குள்
கல், மண், கலவி உச்சத்தில்
பிறந்ததெல்லாம்
சுவர்கள்
கூரை உயர்ந்த வீடுகள்
கட்டிடக்காடுகள்.
வீடுகளில் முற்றமில்லை
முன்வாசலில்லை
கோடிப்பக்கம் கறிமுருங்கை
பூப்பதில்லை
காற்றள்ளிக் கொட்டும்
மாவில்லை, வேம்பில்லை
காகம் கரையக் கொப்பில்லை.
வீடுகள் காய்த்து
கிளைபரப்பி நெடிதுயர்கிறது
தென்னை தோற்று
தலை சவட்டிக் குனிகிறது
இரட்டை மாடிகள்
வளர்ந்து
வளர்ந்து
வான்முகடு கிழியும் விரைவில்
முந்திரி விரும்பிய கிளிகள்
கொட்டைப்பாக்கான் குருவிகள்
வனாந்தரங்களுக்கு
திசை பிரிந்து விட்டது
பட்டமரம் தேடிய மரங்கொத்தி
கருங்கல் தூண்களில்
அலகுடைக்கிறது
வாகை நான்கும்
வம்மி ஐந்தும்
கடைசிப் பூவையும், பிஞ்சையும் உதிர்த்து
ஒற்றையாய் நிற்கிறது
வேரில் துளி நீரும் காய்ந்து கொண்டிருக்கிற
மரங்கள் வற்றிய ஊரில்
நிழல் தேடி அலைகிறது சூரியன்
Illustration by Griselda Gabriele
Subscribe for new writing
Sign up to receive new pieces of writing as soon as they are published as well as information on competitions, creative grants and more.